1) குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டின் புதிய தலைமை தகவல் ஆணையராக யஸ்வர்தன் குமார் சின்ஹாவிற்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். வெளியுறவுத் துறையில் பல்வேறு முக்கிய பொறுப்புகள் வகித்த அதிகாரியான யஸ்வர்தன் குமார் சின்ஹா இங்கிலாந்து, வெனிசுலா மற்றும் இலங்கையின் தூதராக பணியாற்றியுள்ளார். ================ 2) மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக தமிழக அரசு தொடர் நடவடிக்கை எடுத்து வருவதாக பால்வளத்துறை அமைச்சர் கே டி ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கண்ணன் தலைமையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்களை வழங்கி பேசிய அமைச்சர், தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளின் குறைகளை அறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருவதாக கூறினார். ================ 3) மத்திய அரசின் சீர்மிகு நகரம் திட்டத்தின்கீழ், சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 965 கோடியே 87 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 81 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக சூரமங்கலம் மண்டலத்திற்கு உட்பட்ட பள்ளிப்பட்டு பகுதியில் 13 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு 5 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அறிவியல் பூங்கா அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதனை சேலம் மாநகர ஆணையர் சத்தீஷ் இன்று ஆய்வு செய்தார். அறிவியல் விந்தைகளை காட்சிப்படுத்தும் பல்வேறு அம்சங்கள் இந்தப் பூங்காவில் அமைவதுடன் விண்வெளி ஆய்வுக்காக பயன்படுத்தப்படும் ஜி எஸ் எல்வி, பி எஸ் எல்வி மாதிரி ராக்கெட்டுக்கள் இதில் இடம் பெறும் என்று அவர் கூறினார். விண்வெளி பிரம்மாண்டங்களை பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் 30 பேர் அமரக்கூடிய கோளரங்கமும் இப்பூங்காவில் அமையவுள்ளது. ------- 4) கொரோனா தொற்றையொட்டி பட்டாசுகளை வெடிக்க தடை விதிக்கப்படுவதாக கர்நாடக, ராஜஸ்தான், ஹரியானா மற்றும் தில்லி அரசுகள் அறிவித்துள்ளன. பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் காரணமாக கொரோனா நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் பட்டாசுகளை வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான விற்பனை சென்னை தீவுத்திடலில் தொடங்கியுள்ளது. ============= 5) ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் அமைந்துள்ள மத்திய கடல்மீன் ஆராய்ச்சி பிராந்திய நிலையத்தில் பிரத்யேகமாக உற்பத்தி செய்யப்பட்ட 10 லட்சம் இறால் குஞ்சுகள் பாக் ஜலசந்தி கடற்பகுதியில் விடப்பட்டது. இதற்காக கடலிலிருந்து பிடிக்கப்படும் தாய் இறால்களிலிருந்து முட்டைகளைப் பிரித்து எடுத்து பொறிப்பான்கள் மூலம் இறால் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் மூலம் கடலில் இறால் உற்பத்தியை அதிகரித்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும் என விஞ்ஞானிகள் கூறினர். ============== 6) ஜம்மு கஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே மான்கோட் என்ற இடத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று அதிகாலை திடீர் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டனர். சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலுக்கு , இந்திய ராணுவத்தினர் பதிலடி தாக்குதல் நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஷாப்பூர் உள்ளிட்ட சில இடங்களில் பாகிஸ்தான் படையினர் தாக்குதல் நடத்திய நிலையில் தற்போது மீண்டும் அத்துமீறலில் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ============= 7) ஜம்மு கஷ்மீரில் பஹல்காம் அருகே இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4 புள்ளி ஒன்றாக பதிவானது. எனினும் பாதிப்புகள் குறித்து உடனடியாக தகவல் ஏதுமில்லை. நிலநடுக்கம் ஏற்பட்ட போது அந்த பகுதியில் கட்டிடங்களில் லேசான அதிர்வு உணரப்பட்டதாகவும், உயிரிழப்பு ஏற்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ================ Visit : TamilNews - Doordarshan EMAIL : [email protected] INSTAGRAM : / ddpodhigainews FACEBOOK : / ddpodhigainews TWITTER : / tamilnews-doordarshan@ddnewschennai YOUTUBE : http://youtube.com/TamilNews/Doordars...