மகேந்திரவர்மர் (பொ.ஊ. 600 முதல் 630 வரை) தமிழ்நாட்டின் வடபகுதிகளை ஆண்ட பல்லவ அரசனாவார். இவனே வரலாற்றாளர்களால் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் எனக் குறிப்பிடப்படுகிறார். இவர் களப்பிரரை ஒடுக்கி மீண்டும் பல்லவ அரசை நிறுவிய சிம்மவிட்டுணுவின் மகனாவார். இவனது ஆட்சிக்காலத்தில்தான் சாளுக்கிய பேரரசன் இரண்டாம் புலிகேசி காஞ்சியின் மீது படையெடுத்தார். புலிகேசியால் காஞ்சி முற்றுகையிடப்பட்டு பல்லவ சைன்யம் தோற்கடிக்கப்பட்டது. இவர் பொ.ஊ. 630 வரை ஆட்சியிலிருந்தார் என்பதில் கருத்தொற்றுமை இருந்தபோதிலும் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஆண்டு எது என்பதில் கருத்து வேறுபாடு காணப்படுகின்றது. ஆய்வாளர்கள் இவ்வாண்டை பொ.ஊ. 600, 610, 615 எனப் பலவாறாகக் குறிப்பிடுகின்றனர்