திருவாசகத்திற்கு உருகாதார் ஓர் வாசகத்திற்கும் உருகார். திருவேசறவு : மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தின் 38 வது பதிகம். (திருப்பெருந்துறையில் அருளியது , சிவானந்த விளைவு). “நலம் தரும் சிவபுராணம் நாளும் பாடிடு மனமே சிவன் வருவான் அருள் தருவான் வாழ்வில் அனுதினமே ” ------------------------------------------------------------------------------------------------------------------------- திருவேசறவு இரும்புதரு மனத்தேனை ஈர்த்தீர்த்தென் என்புருக்கிக் கரும்புதரு சுவைஎனக்குக் காட்டினைஉன் கழலிணைகள் ஒருங்குதிரை உலவுசடை உடையானே நரிகளெல்லாம் பெருங்குதிரை ஆக்கியவா றன்றேஉன் பேரருளே. 1 பண்ணார்ந்த மொழிமங்கை பங்காநின் ஆளானார்க்கு உண்ணார்ந்த ஆரமுதே உடையானே அடியேனை மண்ணார்ந்த பிறப்பறுத்திட் டாள்வாய்நீ வாஎன்னக் கண்ணார உய்ந்தவா றன்றேஉன் கழல்கண்டே. 2 ஆதமிலி யான்பிறப் பிறப்பென்னும் அருநரகில் ஆர்தமரும் இன்றியே அழுந்துவேற் காவாவென்று ஓதமிலி நஞ்சுண்ட உடையானே அடியேற்குன் பாதமலர் காட்டியவா றன்றேஎம் பரம்பரனே. 3 பச்சைத்தா லரவாட்டீ படர்சடையாய் பாதமலர் உச்சத்தார் பெருமானே அடியேனை உய்யக்கொண்டு எச்சத்தார் சிறுதெய்வம் ஏத்தாதே அச்சோஎன் சித்தத்தா றுய்ந்தவா றன்றேஉன் திறம் நினைந்தே. 4 கற்றறியேன் கலைஞானம் கசிந்துருகேன் ஆயிடினும் மற்றறியேன் பிறதெய்வம் வாக்கியலால் வார்கழல்வந் துற்றிறுமாந் திருந்தேன்எம் பெருமானே அடியேற்குப் பொற்றவிசு நாய்க்கிடுமா றன்றேநின் பொன்னருளே. 5 பஞ்சாய அடிமடவார் கடைக்கண்ணால் இடர்ப்பட்டு நஞ்சாய துயர்கூர நடுங்குவேன் நின்னருளால் உய்ஞ்சேன் எம் பெருமானே உடையானே அடியேனை அஞ்சேலென் றாண்டவா றன்றேஅம் பலத்தமுதே. 6 என்பாலைப் பிறப்பறுத்திங் கிமையவர்க்கும் அறியவொண்ணா தென்பாலைத் திருப்பெருந் துறையுறையுஞ் சிவபெருமான் அன்பால்நீ அகம்நெகவே புகுந்தருளி ஆட்கொண்ட தென்பாலே நோக்கியவா றன்றேஎம் பெருமானே. 7 மூத்தானே மூவாத முதலானே முடிவில்லா ஓத்தானே பொருளானே உண்மையுமாய் இன்மையுமாய்ப் பூத்தானே புகுந்திங்குப் புரள்வேனைக் கருணையினால் பேர்த்தேநீ ஆண்டவா றன்றேஎம் பெருமானே. 8 மருவினிய மலர்ப்பாதம் மனத்தில்வளர்ந் துள்ளுருகத் தெருவுதொறும் மிக அலறிச் சிவபெருமா னென்றேத்திப் பருகியநின் பரங்கருணைத் தடங்கடலிற் படிவாமாறு அருளெனக்கிங் கிடைமருதே இடங்கொண்ட அம்மானே. 9 நானேயோ தவஞ் செய்தேன் சிவாயநம எனப்பெற்றேன் தேனாய்இன் அமுதமுமாய்த் தித்திக்குஞ் சிவபெருமான் தானேவந் தெனதுள்ளம் புகுந்தடியேற் கருள்செய்தான் ஊனாரும் உயிர்வாழ்க்கை ஒறுத்தன்றே வெறுத்திடவே. 10 திருச்சிற்றம்பலம்