நாங்குநேரி : வானமாமலை திருக்கோயில் | TEMPLE RUN DEVOTIONAL |

நாங்குநேரி : வானமாமலை திருக்கோயில் | TEMPLE RUN DEVOTIONAL |

#திருவரமங்கை #நாங்குநேரி : #வானமாமலை என்னும் வானமாமலை என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். 108 திவ்ய தேசங்களில் சுயம்பு மூர்த்தியாக பெருமாள் உள்ள எட்டு தலங்களில் இதுவும் ஒன்றாகும். நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் திருநெல்வேலியிலிருந்து திருக்குறுங்குடி செல்லும் சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீவரமங்கை என்னும் இத்தலத்திற்கு வானமாமலை, நாங்குநேரி, தோத்தாத்ரி, ஸ்ரீவரமங்கை நகர் என்ற பல்வேறு பெயர்களும் உண்டு. பிரம்மாண்ட புராணம், ஸ்கந்த புராணம், நரசிம்ம புராணம் போன்றவற்றில் இத்தலம் பேசப்படுகிறது. உரோம(ரிஷி) முனிவர் தவஞ்செய்து திருமாலைக் கண்டதால் உரோமசேத்திரம் என்றும், ஸ்ரீவரமங்கையாக திருமகள் இவ்விடத்தில் வந்து வளர்ந்து பிறகு எம்பெருமானை மணந்து கொண்டதால் ஸ்ரீவரமங்கை (சீரிவரமங்கல நகர்) எனவும், ஆதிசேடன் இங்கு தவமியற்றி திருமாலுக்கு அணையாக இருக்கும் பேறு பெற்றதால் நாகணை சேரி எனவும், மரங்கள் நிறைந்த வனமும் மலையும் சூழ்ந்த இடமாதலின் வானமாமலை எனவும் இங்குள்ள திருக்குளத்தை நான்கு ஏரிகளாக வெட்டியதால் நான்கு + ஏரி= நான்குநேரிஎனவும்,அந்த நான்கு ஏரிகளின் கூர்மையான முனைகள் சந்திக்கும் மையப் பகுதியில் அமைந்ததால் நான் + கூர் + நேரி என்பது காலப்போக்கில் நாங்குநேரி என பேச்சு வழக்காயிற்று. இங்கு இறைவனுக்கு தினந்தோறும் தைல அபிடேகம் நடைபெறும். அந்த எண்ணெயை எடுத்து நம்பிக்கையுடன் உண்டால் நோய் தீரும் என்பது நம்பிக்கை ஆகும். கோயில் கருவறையில் ஆதிசேடன் குடையாய் இருக்க, வானமாமலைப் பெருமாள் வைகுண்டபதியாக அமர்ந்த திருக்கோலத்தில் இருக்கிறார். அவருக்கு இருபுறமும் ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி தாயார்கள் காட்சி தருகிறனர். இவர்களுக்கு ஊர்வசியும் திலோத்தமையும் சாமரம் வீசுகின்றனர். பிருகு முனிவர், மார்க்கண்டேய முனிவர், சூரியன், சந்திரன் ஆகியோர் பெருமாளை சேவித்தபடி, கருவறையில் வீற்றிருக்கின்றனர். அர்த்த மண்டபத்தில் கருடாழ்வார், விஷ்வக்சேனர் இருக்கிறார். இந்த 13 விக்கிரகங்களும் சுயம்புகள் என்றும். வைகுண்டத்தில் பெருமாள் எப்படி வீற்றிருப்பாரோ அத்தகைய கோலத்திலேயே சுவாமி இங்கு இருப்பதாக நம்பிக்கை உள்ளது. மேலும் கோயிலில் ஞானப்பிரான், லட்சுமி நாராயணர், வேணுகோபாலன், தசாவதார மூர்த்திகள், ராமர், கண்ண பிரான், சக்கரத்தாழ்வார் ஆகியோர் தனிச் சன்னிகளில் உள்ளனர். குலசேகர மண்டபத்தில் நம்மாழ்வாரைத் தவிர 11 ஆழ்வார்களும், கருவறைப் பிரகாரத்தில் 32 ரிஷிகள், தும்பிக்கை ஆழ்வார் ஆகியோரும் உள்ளனர். இத்தலத்தில் உள்ள சேற்றுத் தாமரை தீர்த்தமானது திருப்பாற்கடலின் அம்சமாகவும் சாபம் நீக்கக்கூடியதாகவும் கருதப்படுகிறது. கோவிலுக்கு செல்லும் வழி திருநெல்வேலியில் இருந்து நாகர்கோயில் செல்லும் வழியில் வள்ளியூருக்கு அருகில் நாங்குநேரி என்ற ஊரில் அமைந்துள்ளது இந்த திருக்கோயில் .